ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அண்டை நாட்டிற்கு போதைப் பொருளை கடத்தும் முயற்சி முறியடிப்பு- 26 கிலோ ஷாபு பறிமுதல்

அலோர் காஜா, மே 25– தஞ்சோங் சிப்பாட் கடல் பகுதி வழியாக அண்டை நாட்டிற்கு 10 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 26 கிலோ ஷாபு வகை போதைப் பொருள் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியை மலாக்கா, நெகிரி செம்பிலான் மாநில கடல் அமலாக்க நிறுவன அதிகாரிகள் முறியடித்தனர்.

அந்த போதைப் பொருள் அடங்கிய உடைகள் வைக்கும் பை தஞ்சோங் சிப்பாட், கம்போங் தும்போக் கரையோரத்தில் வைக்கப்பட்டிருந்ததாக மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் மாநில கடல் அமலாக்க நிறுவனத்தின் இயக்குநர் கேப்டன் இஸ்கந்தார் இஷாக் கூறினார்.

கடந்த திங்கள் கிழமை இரவு 10.00 மணியளவில் அப்பகுதியில் ரோந்து நடவடிக்கை மேற்கொண்ட தனது துறை அதிகாரிகள் அந்த பையை கைப்பற்றியதாக அவர் தெரிவித்தார்.

எனினும், அவ்விடத்தில் ஆள்நடமாட்டம் காணப்படாததோடு படகு எதுவும் காணப்படவில்லை என்று அவர் சொன்னார்.

அந்த பையை ரோந்துப் பிரிவினர்  படகில் ஏற்றி சோதனையிட்ட போது தலா ஒரு கிலோ எடையில் 26 பொட்டலங்களில் மஞ்சள் நிற தூள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட சில தரப்பினரால் கடற்கரையில் வைக்கப்படும் அந்த போதைப் பொருள் அடங்கிய பையை போதைப் பொருள் கடத்தல் கும்பல் உறுப்பினர்கள் படகு வழியாக அண்டை நாட்டிற்கு கடத்திச் செல்வர் என்று அவர் கூறினார்.


Pengarang :