ECONOMYMEDIA STATEMENT

உறவுக்கார சிறுமியைக் கொலை செய்ததாக தம்பதியர் மீது குற்றச்சாட்டு

ஈப்போ, மே 25- இரு வாரங்களுக்கு முன்னர் எட்டு வயது உறவுக்காரச் சிறுமியை படுகொலை செய்ததாக ஓய்வு பெற்ற இராணுவ வீரர் மற்றும் அவரின் மனைவி மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த மே மாதம் 13 ஆம் தேதி இரவு 10.00 மணிக்கும் மறுநாள் காலை 7.00 மணிக்கும் இடையே லாஹாட், ஜாலான் டேசா பெங்காலான் பண்டாராயா 8 இல் உள்ள வீட்டில் ஆயிஷா ஃபர்ஹானா முகமது கைருள் அஸ்ரால் எனும் அச்சிறுமியை படுகொலை செய்ததாக ஜைனுடின் நோ(வயது 40) மற்றும் அவரின் மனைவி நோர்ஹஸ்லினா அஸ்ரின் (வயது 40) ஆகிய இருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவு மற்றும் அதே சட்டத்தின் 34 வது பிரிவு ஆகியவற்றின் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மாஜிஸ்திரேட் ஜெசிகா டைமிஸ் முன்னிலையில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. கொலை வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் அவ்விருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

இதனிடையே, கொலை செய்யப்பட்ட சிறுமியின் இளைய சகோதரனை அதே இடத்தில் கடந்த மே 13 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கும் இரவு 10.30 மணிக்கும் டையே சித்ரவதை செய்ததாக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவ்விருவர் மீதும் மற்றொரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

சிறார் சட்டத்தின் 31(1) பிரிவின் கீழ் சுமத்தப்பட்ட இக்குற்றச்சாட்டை அவ்விருவரும் மறுத்து விசாரணை கோரினர்.


Pengarang :