ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஷா ஆலம், மே 26- சிலாங்கூரில் சுற்றுலா மேற்கொள்வோரின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்துள்ளது. ஏறக்குறைய கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலுக்கு முந்தைய நிலை தற்போது காணப்படுவதாக மாநிலத்தின் சுற்றுலா ஊக்குவிப்பு அமைப்பான டூரிசம் சிலாங்கூர் கூறியது.

சுற்றுலா ஈர்ப்பு மையங்களாக புறநகர்ப் பகுதிகளே அதிகம் விளங்குவதாக டூரிசம் சிலாங்கூர் வர்த்தக மற்றும் தொடர்புப் பிரிவின் நிர்வாகி அகமது நஸ்ரி தாஷ்ரிக் ரஹ்மாட் கூறினார்.

குறிப்பாக, சபாக் பெர்ணம் மாவட்டத்திலுள்ள நெல் வயல்கள் மற்றும் ரவாங்கிலுள்ள கஞ்சிங் நீர் வீழ்ச்சி ஆகியவை சுற்றுப்பயணிகளை பெரிதும் கவரும் இடங்களாக விளங்குகின்றன. குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் நோன்புப் பெருநாள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் இத்தகைய இடங்களை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர் என்றார் அவர்.

நோன்புப் பெருநாளின் இரண்டாம் நாள் தொடங்கி சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 100 விழுக்காடு அதாவது கோவிட்-19 பெருந்தொற்று பரவலுக்கு முன்பு இருந்ததைப் போல் உயர்ந்துள்ளது என்று சிலாங்கூர் கினியிடம் அவர் தெரிவித்தார்.

நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தின் போது பொது மக்கள் சுற்றிப் பார்ப்பதற்கு உகந்த பத்து இடங்களின் பட்டியலையும் டூரிசம் சிலாங்கூர் வெளியிட்டுள்ளது.


Pengarang :