ECONOMYPBTSELANGOR

மலிவு விலையில் கோழி விற்பனைத் திட்டம் ஜூன் மாதம் தொடங்கும்

ஷா ஆலம், மே 27– மலிவு விலையில் கோழி விற்பனை செய்யும் திட்டத்தை சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகமும் (பி.கே.பி.எஸ்.) கோப்பராசி வர்கா ஹிஜ்ரா சிலாங்கூர் (கோஹிஜ்ரா) கூட்டுறவுக் கழகமும் வரும் ஜூன் மாதம் முதல் மேற்கொள்ளவுள்ளன.

இந்த மலிவு விற்பனை மக்கள் பரிவு விற்பனைத் திட்டத்தைக் காட்டிலும் வேறுபட்ட முறையில் மேற்கொள்ளப்படும் என்று  நவீன விவசாயம் மற்றும் விவசாய அடிப்படைத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இந்த மலிவு விற்பனை நடைபெறும் இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும். மக்களுக்கு தொடர்ச்சியாகவும் குறைந்த விலையிலும் கோழிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் சொன்னார்.

இம்முறை மேற்கொள்ளப்படும் மலிவு விற்பனை மாறுபட்டதாக இருந்தாலும் நிச்சயம் அது பொது மக்களுக்கு லாபம் அளிக்கக்கூடியதாக இருக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

கோழி பற்றாக்குறை பிரச்னைக்கு குறுகிய காலத்  தீர்வை ஏற்படுத்து நோக்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் நோன்புப் பெருநாள் காலம் வரை அமல்படுத்தப்பட்ட மலிவு விற்பனைத் திட்டத்தை மாநில அரசு மீண்டும் தொடரவுள்ளதாக இஷாம் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :