ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

ஒரு லட்சம் வெள்ளி நிதியில் ஜியாரா மெடிக் இரண்டாம் கட்டத் திட்டம்- ஆகஸ்டு மாதம் தொடங்கும்

ஷா ஆலம், மே 27- பெக்காவானிஸ் எனப்படும் சிலாங்கூர் மகளிர் சமூக நல அமைப்பின் இரண்டாம் கட்ட உதவித் திட்டத்திற்கு ஒரு லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் ஆகஸ்டு மாதம் தொடங்கவுள்ளது.

இந்த இரண்டாம் கட்ட உதவித் திட்டத்தின் மூலம் 41 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 400 கடும் நோயாளிகள் பயனடைவர் என்று பெக்கவானிஸ் அமைப்பின் சமூக நல மற்றும் விழாக்கால பிரிவுக்கான தலைவர் டத்தின் ஷரிபா மஹிஸா சைட் அப்துல் காடீர் கூறினார்.

ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பத்து பேருக்கு உதவுவதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு தலா 2,500 வெள்ளி வழங்கப்படும். சரியான தரப்பினருக்கு உதவி கிடைப்பதை உறுதி செய்ய முறையாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சமூக நல இலாகா அல்லது ஸக்கத் வாரியம் மூலம் உதவிகள் பெற்றாலும், தற்போது அதிகரித்து வரும் மருந்து விலையை ஈடு செய்ய எங்களின் இந்த உதவி அவர்களுக்கு ஓரளவு துணை புரியும் என்று அவர் தெரிவித்தார்.

இன்று இங்குள்ள புத்ரி அராஃபியா இல்லத்தில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இந்த ஜியாரா மெடிக் திட்டத்தை 38 சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கொள்ள 95,000 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக பெக்காவானிஸ் தலைவர் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது கடந்த மார்ச் மாதம்  கூறியிருந்தார்.


Pengarang :