ECONOMYMEDIA STATEMENT

கிள்ளானில் 180 பிட்காயின் இயந்திரங்கள் கொள்ளை- 12 பேர் கைது

கிள்ளான், மே 30- லட்சக்கணக்கான வெள்ளி மதிப்புள்ள 180 பிட்காயின் இயந்திரங்கள் கொள்ளையிடப்பட்டச் சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட ஒன்பது அதிரடிச் சோதனைகளில் இந்தோனேசிய ஆடவர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இருபது முதல் 40 வயது வரையிலான அந்த 12 பேரும் இம்மாதம் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் கிள்ளான் நகரின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எஸ். விஜயராவ் கூறினார்.

கடந்த மாதம் 27 மற்றும் இம்மாதம் 20 ஆம் தேதிகளில் நிகழ்ந்த இரு திருட்டுச் சம்பவங்களில் 180 பிட்காயின் இயந்திரங்கள் காணாமல் போனது தொடர்பில் மேரு பாராட் தொழில்பேட்டையிலுள்ள அலுமினியத் தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளர் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

அதிகாலை வேளையில் அத்தொழிற்சாலையை முற்றுகையிட்ட அந்த கொள்ளையர்கள் பாதுகாவலரைக் கட்டிப் போட்டுவிட்டு தங்கள் கைவரிசையைக் காட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

கைது செய்யப்பட்ட உள்நாட்டினர் அனைவரும் போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல் தொடர்பில் குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பது விசாரணையில் தெரிய வந்ததாக கூறிய அவர், இந்தோனேசிய ஆடவர் எந்தவொரு குற்றப் பின்னணியையும் கொண்டிருக்கவில்லை என்றார்.

இந்தக் கும்பலை கைது செய்ததன் வழி வட கிள்ளான் மாவட்டத்தில் நிகழ்ந்த மூன்று பிட்காயின் கொள்ளைச் சம்பவங்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :