ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

தென்கிழக்காசியாவில் போதை மாத்திரை பறிமுதல் கடந்தாண்டு அபரிமித அதிகரிப்பு- ஐ.நா. தகவல்

பேங்காக், மே 31- கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் கடந்தாண்டு மெத்தம்பெத்தமின் போதைப் பொருள் மீதான பறிமுதல் நடவடிக்கை அபரிமிதமாக அதிகரித்து 100 கோடி மாத்திரைகளை எட்டியதாக போதைப் பொருள் மற்றும் குற்றச்செயல் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) அலுவலகம் கூறியது.

அந்த செயற்கை போதைப் பொருளின் வர்த்தகம் கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வருவதோடு கடந்தாண்டில் அதன் உற்பத்தியும் கடத்தலும் புதிய உச்சத்தை தொட்டதாக “கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் செயற்கை போதைப் பொருள்“ எனும் தலைப்பிலான அறிக்கையில் அது தெரிவித்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் சுமார் 172 டன் மெத்தம்பெத்தமின் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பத்தாண்டுகளுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டதை விட இது எழு மடங்கு அதிகமாகும் என அது குறிப்பிட்டது.

எனினும், கிறிஸ்டல் மெத்தம்பெத்தமின் மாத்திரைகளின் கடத்தல் சற்று குறைந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் அந்த ரகத்தைச் சேர்ந்த 82 டன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட வேளையில் கடந்தாண்டில் அது 79 டன்களாக குறைந்தது.

அண்மைய சில ஆண்டுகளாக தங்க முக்கோணம், மியன்மார் எல்லைப் பகுதிகளில் காணப்படும் அரசியல் நிலைத்தன்மையற்றப் போக்கு மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றை சட்டவிரோதக் கும்பல்களும் ஆயுதக் கும்பல்களும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாக ஐ.நா. வின் போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் மீதான அலுவலகத்தின் வட்டார பிரதிநிதி ஜெரேமி டக்ளஸ் கூறினார்.

இந்த போதைப் பொருளை கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் முக்கிய மையமாக லாவோஸ் விளங்குகிறது. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளுக்கு போதைப் பொருளை அனுப்புவதற்கான முக்கிய மாற்று வழித்தடமாக மலேசிய பயன்படுத்தப்படுகிறது என்றார் அவர்.


Pengarang :