ANTARABANGSAECONOMYSUKANKINI

ஆசிய கிண்ண ஹாக்கி போட்டி- ஜப்பானை 5-0 கோல் கணக்கில் வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது மலேசியா

ஜாகர்த்தா, ஜூன் 1- இங்குள்ள கெலோரா புங் கார்னோ அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற ஆசிய கிண்ண ஹாக்கி போட்டியில் மலேசியா ஜப்பானை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.

மிகுந்த கவனத்துடன் ஆட்டத்தை தொடக்கிய இரு குழுக்களும் கோல் முனையை நோக்கி இடை விடாமல் தாக்குதல் நடத்திய வண்ணம் இருந்தன. “தி ஸ்பீடி டைகர்கஸ்“ என அழைக்கப்படும் மலேசிய அணி ஆட்டத்தின் 15 வது நிமிடத்தில் ஷெல்லோ சில்வரியோஸ் மூலம் தனது முதல் கோலை போட்டது.

மறு பாதி ஆட்டத்தில் தற்காப்பு அரணைத் தாண்டி ஜப்பானின் கோல் முனையை நோக்கி மலேசிய அணி தொடர் தாக்குதல்களை நடத்தியது. எனினும், ஜப்பானிய கோல் கீப்பர் கோஜி யாமாசாக்கியின் அபார ஆட்டத்திறன் காரணமாக அம்முயற்சிகள் யாவும் முறியடிக்கப்பட்டன.

ஆட்டத்தின் 30 நிமிடத்தில் நிக் முகமது அய்மான் மூலம் இரண்டாவது கோலையும் ஐந்து நிமிடங்கள் கழித்து முகமது ராஸி அப்துல் ரஹிம் மூலம் மூன்றாவது கோலையும் மலேசியா புகுத்தியது.

பயிற்றுநர் ஏ. அருள் ராஜ் தலையிலான மலேசிய குழு தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தின் 35 வது நிமிடத்தில் நான்காவது கோலையும் 42 வது நிமிடத்தில் ஐந்தாவது கோலையும் செலுத்தி வெற்றியை உறுதி செய்தது.

நாளை நடைபெறவிருக்கும் இறுதியாட்டத்தில் மலேசிய அணி, இந்தியா அல்லது தென் கொரியாவை சந்திக்கவுள்ளது.  இறுதியாட்டத்தில் நுழைவதற்காக இவ்விரு அணிகளும் இன்று களம் காண்கின்றன.

அதே சமயம், இந்த ஆட்டத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை உறுதி செய்வதற்கான ஆட்டத்தில் இன்றைய ஆட்டத்தில் தோல்வி காணும் குழுவுடன் ஜப்பான்  மோதவிருக்கிறது.


Pengarang :