ECONOMYSELANGORSENI

ஆட்சிக்குழு உறுப்பினர்களின் உடையாக பாத்தேக் பூங்கா தஞ்சோங் அறிமுகம்- ஒப்புதலுக்காக சுல்தானிடம் அனுப்பப்படும்

ஷா ஆலம், ஜூன் 2- பூங்கா தஞ்சோங் எனப்படும் மகிழம் பூவை அடிப்படையாகக் கொண்ட பாத்தேக் சிலாங்கூர் உடையை மாநில அரசின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளில் பயன்படுத்தவுள்ளனர்.

ஒப்புதலைப் பெறுவதற்காக இந்த உடை தொடர்பான பரிந்துரை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் அல் ஹாஜ் அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கலாசாரம் மற்றும் பாரம்பரியத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் பெர்ஹான் அமான் ஷா கூறினார்.

ஒப்புதலுக்காக மேன்மை தங்கிய சுல்தானிடம் இந்த பரிந்துரையைச் சமர்ப்பிக்கவுள்ளோம். பின்னர் இ‘து மாநில சட்டமன்றத்தில் ஆர்ஜிதம் செய்யப்பட்டு மாநில அரசின் அதிகாரப்பூர்வ உடையாக பிரகடனப்படுத்தப்படும் என்றார் அவர்.

மகிழம் பூவை அடிப்படையாகக் கொண்ட பாத்தேக் சிலாங்கூரை உடையை வரையும் மற்றும் வண்ணம் தீட்டும் பட்டறையை இன்று இங்கு  தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பாத்தேக் சிலாங்கூரை அறிமுகப்படுத்துவதற்கும் எதிர்காலத்தில் அதிகமானோர் அந்த உடையை அணிவதை ஊக்குவிப்பதற்கும் ஏதுவாக அதனை சந்தைப்படுத்தும் திட்டத்தைத் தாங்கள் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பாத்தேக் சிலாங்கூர் உடை சிலாங்கூரிலுள்ள அருங்காட்சியகங்களின் விற்பனை கூடங்களில் சந்தைப்படுத்தப்படும். வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகள் அதனை நினைவுச் சின்னமாகவும் அணிந்து கொள்வதற்காகவும் வாங்கிச் செல்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் சொன்னார்.


Pengarang :