ECONOMYSELANGOR

கோலாலம்பூரின் முக்கிய சாலைகளில் நுழைய கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு

கோலாலம்பூர், ஜூன் 3- கோலாலம்பூரின் முக்கிய சாலைகளில் நுழைய கனரக வாகனங்களுக்கு சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) நேரக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதன்படி 7,500 கிலோ மற்றும் அதற்கும் அதிகமான எடை கொண்ட வாகனங்கள் அதிகாலை 6.30 மணி முதல் காலை 9.30 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில் நுழைய முடியாது.

காலை மற்றும் மாலை போன்ற வாகன போக்குவரத்து உச்சத்தில் இருக்கும் நேரங்களில் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீரான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதற்கு கனரக வாகனங்கள் காரணமாக உள்ளது ஜே.பி.ஜே, மேற்கொண்ட கண்காணிப்பில் தெரியவந்துள்ளது.

பயணத் தடை அமல்படுத்தப்பட்ட பகுதியாக ஆர்ஜிதம் செய்யப்பட்ட நகரின் நுழைவாயிலிருந்து மையப்பகுதி வரையிலான ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிலுள்ள சாலைகளில் கன ரக வாகனங்களுக்குத் தடை விதிப்பது தொடர்பான பிரத்தியேக அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும் என அத்துறை தெரிவித்தது.

தாமான் வாயு முதல் ஜாலான் ஈப்போ வரையிலான ஜாலான் கூச்சிங், துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரி முதல் நகரின் மையப் பகுதி வரையிலான ஜாலான் கெந்திங் கிள்ளான், தாமான் மீடா முதல் நகரின் மையப்பகுதி வரையிலான ஜாலான் செராஸ் ஆகியவை காலை நேரத்தில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட சாலைகளில் அடங்கும்.

இதனிடையே, ஜாலான் கெப்போங், ஜாலான் ஈப்போ, ஜாலான் பத்துகேவ்ஸ், காராக் நெடுஞ்சாலை, ஜாலான் கோம்பாக், ஜாலான் கெந்திங் கிள்ளான், ஜாலான் செராஸ் ஆகிய சாலைகளில் மாலை நேரத்தில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்கள் மாநகரின் மையப்பகுதிக்குள் நுழைவதற்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கும் நடைமுறை நீண்டகாலமாக அமலில் இருந்து வந்த தாகவும் பெருந்தொற்று பரவலுக்குப் பின்னர் ஓட்டுநர்கள் அந்த விதிமுறையை அவ்வளவாக கடைபிடிக்காத காரணத்தால் மாநகரில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்படுவதாகவும் ஜே.பி.ஜே வெளியிட்ட அந்த அறிக்கை  தெரிவித்தது.


Pengarang :