ECONOMYHEALTHSELANGOR

வார இறுதியில் உலு பெர்ணம், சிகிஞ்சான் தொகுதிகளில் “சிலாங்கூர் சாரிங்“ மருத்துவ பரிசோதனை இயக்கம்

சுபாங் ஜெயா, ஜூன் 3- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் “சிலாங்கூர் சாரிங்“ எனப்படும் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

பரிசோதனை நடைபெறும் இடங்களுக்கு நேரில் வருகை புரிவோரின் எண்ணிக்கை மட்டுமின்றி செலங்கா செயலி வாயிலாக இச்சோதனைக்கு பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் உயர்வு கண்டு வருவதாக அவர் சொன்னார்.

உதாரணத்திற்கு இத்திட்டத்தில் ஆயிரம் பேருக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் சோதனை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தோம். எனினும், இந்த திட்டம் ஆரம்பித்த இரு வாரங்களில் அச்சோதனைக்கான இடங்களில் 80 விழுக்காடு முன் பதிவு செய்யப்பட்டு விட்டது என்றார் அவர்.

மேலும் அதிகமானோர் பங்கேற்பதற்கு ஏதுவாக இந்த புற்று நோய் சோதனைக்கான கோட்டாவை நாங்கள் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது. பொதுமக்கள் மத்தியில் உடல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு இந்த பரிசோதனைத் திட்டம் குறித்து அதிகளவில் விளம்பரப்படுத்தவுள்ளோம் என அவர் சொன்னார்.

சிலாங்கூர் சாரிங் எனும் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தை மாநில அரசு அனைத்து தொகுதிகளிலும் கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் வரும் ஜூன் மாதம் 4 ஆம் தேதி வரை நடத்துகிறது.

சுமார் 34 லட்சம் வெள்ளி செலவில் மேற்கொள்ளப்படும் இந்த இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தின் வழி மாநிலத்திலுள்ள சுமார் 39,000 பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இலவச பரிசோதனை இயக்கம் இவ்வாரம் சனிக் கிழமை உலு பெர்ணம் டேவான் கிளப் கூ சோவிலும் ஞாயிற்றுக் கிழமை சிகிஞ்சான், யோக் குவான் சீனப்பள்ளியிலும நடைபெறும்.


Pengarang :