ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் குடிநுழைவுத் துறை சோதனை- 49 பேர் கைது

கோலாலம்பூர், ஜூன் 4- அம்பாங்கிலுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடிநுழைவுத் துறையினர் நேற்றிரவு மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் செல்லத் தக்க பயணப் பத்திரங்களை கொண்டிராதது உள்பட பல்வேறு குற்றங்களின் பேரில் 49 அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

இரண்டு மணி நேரத்திற்கு நீடித்த இச்சோதனையில் ஆப்கானிஸ்தான், லிபியா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 205 பேர்  மீது சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் ஷியம்சுல் பட்ரின் மோஷின் கூறினார்.

மொத்தம் 31 அதிகாரிகளை உள்ளடக்கிய  இச்சோதனையின் போது 6 மாதம் முதல் 68 வயது வரையிலானோர் மீது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 197 ஆப்கானிஸ்தானியர்கள், ஆறு லிபியர்கள் இரு இந்தியர்களும் அடங்குவர் என்றார் அவர்.

இந்நடவடிக்கையின் போது சோதிக்கப்பட்ட பெரும்பாலான ஆப்கானியர்கள் தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் கீழ் இந்நாட்டில் அடைக்கலம் பெற்றவர்களாவர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட அனைத்து அந்நிய நாட்டினரும் மேல் நடவடிக்கைக்காக புக்கிட் ஜாலிலில் உள்ள குடிநுழைவுத் துறையின் தடுப்புக் காவல் முகாமுக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக கூறிய அவர், 1963 ஆம் ஆண்டு குடிநுழைவுத் துறை சட்டத்தின் 61சி பிரிவின் கீழ் அவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.


Pengarang :