ECONOMYNATIONAL

ஒரு மாத காலத்தில் 8,843 முதலாளிகள் சொக்சோவில் பதிவு 

ஷா ஆலம், ஜூன் 8– சொக்சோ எனப்படும் சமூக  பாதுகாப்பு நிறுவனத்தில் பதிவதற்கு மே 31 வரை வழங்கப்பட்ட ஒரு மாத கால அவகாசத்தைப் பயன்படுத்தி 8,843 முதலாளிகள் அந்த பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் பதிவு செய்த 7,709 முதலாளிகளுடன் ஒப்பிடுகையில் இது  14 விழுக்காடு அதிகம் என்பதோடு மிகவும் வரவேற்கத்தக்க வகையிலும் உள்ளதாக சொக்சோ தலைமை செயல்முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அஜிஸ் முகமது கூறினார்.

சொக்சோவில் இன்னும் பதிவு செய்யாத முதலாளிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விரைந்து பதிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாட்டிலுள்ள அனைத்து சொக்சோ அலுவலகங்களிலும் இதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்படுவதோடு தாமதமாக பதிவு செய்ததற்காக அந்த முதலாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என அவர் தெரிவித்தார்.

இன்று இங்குள்ள செக்சன் 15 பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் கெசான் நடவடிக்கைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
முன்னதாக அவர், தேசிய நிலையிலான ஓப்ஸ் கெசான் இயக்கத்தை இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் தொடக்கி வைத்தார்.

குறைந்தது ஒரு ஊழியரை வேலைக்கமர்த்தியுள்ள முதலாளிகள் சொக்சோவில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என 1969 ஆம் ஆண்டு சமூக பாதுகாப்பு  நிறுவனச் சட்டம் மற்றும் 2017 ஆம் ஆண்டு (சட்டம் 800) தொழிலாளர் காப்புறுத் முறை சட்டம் வலியுறுத்துகிறது.


Pengarang :