ECONOMYHEALTHSELANGOR

தலைவலி, தலைச்சுற்றல் உள்ளவர்கள் உடனடியாக இலவச மருத்துவப் பரிசோதனையில் பங்கேற்பீர்- சித்தி மரியா அறிவுறுத்து

ஷா ஆலம், ஜூன் 10– தலைவலி மற்றும் தலைச்சுற்றல் பிரச்னையை அடிக்கடி எதிர்நோக்குவோருக்கு உயர் இரத்த அழுத்தப் பிரச்னை இருப்பதற்கான சாத்தியம் உள்ளதால் அவர்கள் உடனடியாக மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்வது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இத்தகையப் பிரச்னைகளை எதிர்நோக்குவோர் சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டில் வார இறுதியில் கோல லங்காட், கோல சிலாங்கூர் மற்றும் உலு லங்காட்டில் நடைபெறும் சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும்படி பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

லெம்பா ஜெயா மற்றும் புக்கிட் அந்தாராபங்சா தொகுதிகள் நிலையிலான இந்த பரிசோதனைத் திட்டம் டேவான் லெம்பா ஜெயாவில் நாளை நடைபெறவுள்ளது.

வரும் ஞாயிற்றுக் கிழமையன்று சிஜங்காங் தொகுதி நிலையிலான மருத்துவப் பரிசோதனை டேவான் வாவாசான் கம்போங் மேடானிலும் பெர்மாத்தாங் மற்றும் சுங்கை பூரோங் தொகுதிக்கான பரிசோதனை கம்போங் திராம் ஜெயா சமூக மண்டபத்திலும் நடைபெறும்.

மாநிலத்திலுள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட குடிமக்களில் 30 விழுக்காட்டினர் உயர் இரத்த அழுத்தப் பிரச்னையை எதிர்நோக்கி வருவதாக சித்தி மரியா கூறினார்.

இந்த இலவச பரிசோதனையில் பங்கேற்க விரும்புவோர் செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :