ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வேலையில்லாதோர் எண்ணிக்கையை 2.6 விழுக்காடாக குறைக்க வேலை வாய்ப்புச் சந்தை உதவும்

ஷா ஆலம், ஜூன் 12– மாநில அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “கார்னிவெல் கெர்ஜாயா மெகா 2022“ வேலை வாய்ப்புச் சந்தையில் வழங்கப்படும் 20,000 வேலை வாய்ப்புகளும் முழுமையாக நிரப்பப்படும் பட்சத்தில் மாநிலத்தில் வேலையின்மைப் பிரச்னையை 2.60 விழுக்காடாக குறைக்க முடியும்.

இவ்வாண்டு மார்ச் மாத நிலவரப்படி மாநிலத்தில் 118,100 பேர் அல்லது 3.2 விழுக்காட்டினர் வேலையின்றி உள்ளதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

கடந்தாண்டில் இந்த எண்ணிக்கை 105,300 பேராக அல்லது 2.9 விழுக்காடாக மட்டுமே இருந்தது. இந்த எண்ணிக்கை உயர்வு கவலையளிக்கும் வகையில் உள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் 5,000 முதல் 6,000 பேர் வரை இங்கு வேலை வாய்ப்பினை வழங்கும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். வழங்கப்படும் வேலை வாய்ப்புகளில் சுமார் 30 விழுக்காடு நிறைவு செய்யப்பட வேண்டும் என்பது எங்களின் இலக்காகும் என்றார் அவர்.

நேற்று தொடங்கி இரு தினங்களுக்கு இங்குள்ள எம்.பி.எஸ்.ஏ மாநாட்டு மையத்தில் நடைபெறும் வேலை வாயப்புச் சந்தையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்தாண்டு இறுதி வரை மாநிலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை நான்கு விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்ததாக கூறிய அவர், பொது மக்கள் வேலை வாய்ப்பினை பெறுவதற்குரிய உரிய தளத்தை உருவாக்கித் தரும் முயற்சியில் மாநில அரசு தொடர்ந்து ஈடுபடும் என்றார்.

இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை முறையாகப் பயன்படுத்தி மாநிலத்தில் மனித மூலனத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்


Pengarang :