ECONOMYMEDIA STATEMENT

நெடுஞ்சாலையில் மூர்க்கமடைந்த ஆடவரின் அடாவடிச் செயல்- போலீஸ் விசாரணை

ஈப்போ, ஜூன் 13- ஆடவர் ஒருவர் மூர்க்கமடைந்த நிலையில் நெடுஞ்சாலையில் அடாவடித்தனமாக நடந்து கொண்ட சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 253வது கிலோமீட்டரின் தெற்கு நோக்கிச் செல்லும் தடத்தின் கோல கங்சார் பகுதியில் நேற்று மாலை  இச்சம்பவம் நிகழ்ந்தது.

அந்த ஆடவர் தனது வாகனத்தை நெடுஞ்சாலையின் வலது தடத்தில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது தொடர்பில் நேற்றிரவு 7.12 மணியளவில் தங்கள் புகாரைப் பெற்றதாக  பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ மியோ ஃபரிடாலத்ராஷ் வாஹிட் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவர் ஈப்போவில் புகார் செய்துள்ளார். எனினும் கோல கங்சார் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவு இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது என்று அவர் சொன்னார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேகப் பேர்வழியையும் சாட்சிகளையும் அடையாளம் காணும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆடவர் ஒருவர் தனது காரை நெடுஞ்சாலையின் வலது புறத்தில் நிறுத்திவிட்டு கையில் தங்கச் சங்கிலியை பிடித்தவண்ணம் காரின் மீது ஏறியும் சாலையில் பயணிக்கும் இதர கார்களை உதைத்தும் அட்டகாசத்தில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தன.


Pengarang :