ECONOMYMEDIA STATEMENT

வீட்டில் எழுந்த பலத்த சத்தம் பிட்காயின் சுரங்க  நடவடிக்கையை  அம்பலப்படுத்தியது

புத்ரா ஜெயா, ஜூன் 15– சிப்பாங், தாமான் புத்ரா பிரிமாவிலுள்ள வீடொன்றிலிருந்து எழுந்த பெரும் சத்தம் அந்த குடியிருப்பில் பிட்காயின் சுரங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை அம்பலப்படுத்தியது.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகாரைத் தொடர்ந்து அவ்வீட்டில் நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வரவேற்புக்கூடம் மற்றும் அறைகளில் பிட்காயின் இயந்திரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமாருள் அஸ்ரான் வான் யூசுப் கூறினார்.

இச்சோதனை நடவடிக்கையில் 36 பிட்காயின் இயந்திரங்கள், 28 மின் விநியோக சாதனங்கள், 9 மின்விசிறிகள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தெனாகா நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து இந்த சோதனையை நாங்கள் மேற்கொண்டோம். அந்த வீட்டில் மின் திருட்டு, சட்டவிரோத மின் இணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தெனாகா நேஷனல் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றார் அவர்.

இச்சம்பவம் தொடர்பில் வீட்டு முகவர் என சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரை தாங்கள் விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.


Pengarang :