ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHSELANGOR

டிங்கி பரவலைத் தடுக்க சிலாங்கூர் அரசு வெ. 50 லட்சம் ஒதுக்கீடு- டாக்டர் சித்தி மரியா தகவல்

ஷா ஆலம், ஜூன் 15– சிலாங்கூரில் அதிகரித்து வரும் டிங்கி காய்ச்சல் சம்பவங்களைக் கட்டுப்படுத்த மாநில அரசு 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

டிங்கி நோய் பரவும் சாத்தியம் உள்ள இடங்களை புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்காணிக்கக்கூடிய முன்னோடித் திட்டம் ஒன்றை மாநில அரசு மேற்கொண்டு வருவதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

நோய்ப் பரவும் சாத்தியம் அதிகம் உள்ள இடங்களை அடையாளம் காண டிரோன் சாதனங்களைப் பயன்படுத்துவது மற்றும்  அத்தகைய இடங்களை பொது மக்களும் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக செயலி ஒன்றை உருவாக்குவது ஆகியவையும் அந்த முன்னோடித் திட்டத்தில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

இன்று அனுசரிக்கப்படும் 2022 ஆம் ஆண்டிற்கான ஆசியான் டிங்கி தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

டிங்கி நோய்த் தடுப்புத் திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக மாநில அரசு இவ்வாண்டில் 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் அவர் சொன்னார்.

டிங்கி நோய்த் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்வதற்காக சமூக நிலையிலான திட்டங்களை சுக்கா எனப்படும் சிலாங்கூர் சமூக சுகாதார தன்னார்வலர் அமைப்பு மேற்கொள்ளும் என்று  அவர் மேலும் தெரிவித்தார்.

ஏடிஸ் கொசுக்கள் பரப்பும் வைரஸ் மூலம் டிங்கி காய்ச்சல் பரவுகிறது. கொசு பரவலை தடுப்பதற்கான விழிப்புணர்வு மற்றும் செயல்பாடுகள் மூலம் இந்நோய்ப் பரவலை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :