ECONOMYSELANGORTOURISM

சிலாங்கூரில் சுற்றுலாத் துறையை பிரபலப்படுத்த வெ.60 லட்சம் ஒதுக்கீடு

கோலாலம்பூர், ஜூன் 17– வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை அதிகளவில் ஈர்ப்பதற்காக வேளாண் சுற்றுலா மற்றும் சூழியல் சுற்றுலாத் துறைகளில் மாநில அரசு கவனம் செலுத்தும்.

பெரும்பாலான சுற்றுப் பயணிகள் இத்தகைய சுற்றுலா இடங்களை இன்னும் அறியாமலிருப்பதாக சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

சூழியல் சுற்றுப்பயணிகளைக் கவர காடுகள், நீர்வீழ்ச்சி, மின் மினிப் பூச்சிகள் சரணாலயம், ஸ்கை மிரர் போன்ற இடங்களும் வேளாண் சுற்றுப்பயணிகளை கவர்வதற்கு சிகிஞ்சான் மற்றும் சிப்பாங்கில் பல கவர்ச்சிகரமான இடங்களும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டில் மற்றுமின்றி வெளிநாடுகளிலும் உள்ள சுற்றுப் பயணிகள் மத்தியில் சிலாங்கூரை பிரபலப்படுத்துவதற்கு மாநில அரசு 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது என்றார் அவர்.

நேற்று இங்குள்ள விஸ்மா சைனிஸ் அசெம்பளியில் கைப்பேசி மூலம் புகைப்படம் எடுக்கும் போட்டியைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சுற்றுலா மையங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக அவ்விடங்களை தரம் உணர்த்துவதற்கு 15 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றுலா மையங்களை சீரமைப்பதில் ஊராட்சி மன்றங்கள், சுற்றுலா, கலை,கலாசார அமைச்சு மற்றும் டூரிசம் சிலாங்கூர் போன்ற தரப்பினரின் ஒத்துழைப்பை தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :