ECONOMYMEDIA STATEMENT

நெடுஞ்சாலையில் அடாவடித்தனம் புரிந்த ஆடவரை மனநல சோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

கோல கங்சார், ஜூன் 17– பிளஸ் நெடுஞ்சாலையில் இதர வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில்  அடாவடித்தனமாக நடந்து கொண்ட ஆடவரை கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்காக 30 நாட்களுக்கு உலு கிந்தா, மனநல மருத்துவமனைக்கு அனுப்ப இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜைனோர்டின் முகமது (வயது 36) என்ற அந்த ஆடவரை மருத்துவ பரிசோதனைக்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 342 வது பிரிவின் கீழ் அந்த மருத்துவமனைக்கு அனுப்ப அரசுத் தரப்பு வழக்கறிஞர் நுர் அஸ்மானிஸா முகமது செய்து கொண்ட விண்ணப்பத்தை நீதிபதி ரோஹாய்டா ஏற்றுக் கொண்டார்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது அந்த ஆடவர் புத்தி சுவாதீனத்துடன் காணப்படவில்லை. ஆகவே, அவருக்கு மருத்துவமனையில் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நுர் அஸ்மானிஸா நீதிமன்றத்தில் கூறினார்.

நீதிமன்றத்தில் தனக்கெதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டையும் மேலும் இரு குற்றச்சாட்டுகளையும் ஜைனோர்டின் ஒப்புக் கொண்டார். குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அவர் தனக்கு தானே பேசிக் கொண்டதோடு நிதானமின்றியும் காணப்பட்டார்.

கார் ஒன்றின் கண்ணாடியை எட்டி உதைத்து உடைத்த தாக குற்றவியல் சட்டத்தின் 427வது பிரிவின் கீழ் அவர் மீது முதலாவது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. இப்பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு முதல் ஐந்தாண்டு வரையிலானச் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

இதர வாகனமோடிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தனது காரை நெடுஞ்சாலையின் வலது தடத்தில்  நிறுத்தியதாக அவருக்கு எதிரான இரண்டாவது குற்றச்சாட்டில் கூறப்பட்டது.

கோல கங்சார் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் சோதனை செய்யப்பட்டபோது கஞ்சா  போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்தந்தாக அவருக்கு எதிரான மூன்றாவது குற்றச்சாட்டில் கூறப்பட்டது.


Pengarang :