ECONOMYMEDIA STATEMENT

கள்ள நோட்டைப் பயன்படுத்தியதாக அங்காடிக் கடை பணியாளர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜூன் 17- கள்ள அமெரிக்க டாலர் நோட்டைப் பயன்படுத்தியதாக தம்மீது கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை அங்காடிக் கடை பணியாளர் ஒருவர் மறுத்து விசாரணை கோரினார்.

இம்மாதம் 7 ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் ஜாலான் ராஜா சூலானில் உள்ள நாணய மாற்றும் மையத்தில் பல்வேறு பதிவு எண்களைக் கொண்ட தலா 100 டாலர் மதிப்புள்ள 100 போலி அமெரிக்க டாலர் நோட்டுகளை பயன்படுத்தியதாக சேக் அலி சுபுஹாய் (வயது 54) என்பவர் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரையிலானச் சிறை, அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 4489பி பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்த குற்றத்திற்கு ஜாமீன் வழங்கப்படாது என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் நுர்லியானா முகமது ஜுப்ரி கேட்டுக் கொண்டார்.

எனினும், நீதிமன்றம் விவேகத்திற்குட்பட்டு தனது கட்சிக்காரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என எதிர்த்தரப்பு வழக்கறிஞர் கேஷ்ரினா சீடு தனது வாதத்தில் கூறினார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 20,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி அகமது கமார் ஜமாலுடின், இந்த வழக்கின் மறு விசாரணையை வரும் ஜூலை 26 ஆம் தேதிக்கு நிர்ணயித்தார்.


Pengarang :