ECONOMYMEDIA STATEMENT

குடிநுழைவுத் துறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளையில் ஈடுபட்ட அறுவர் கைது

கோலாலம்பூர், ஜூன் 17- தலைநகரின் சுற்றுவட்டாரங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதோடு குடிநுழைவுத் துறை அதிகாரிகள் போல் நடித்த குற்றத்தின் பேரில் ஆறு உள்நாட்டினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இருபத்து மூன்று முதல் 43 மூன்று வயது வரையிலான மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்களே போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் கைதாவர்களாவர் என்று செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இட்ஸாம் ஜாபர் கூறினார்.

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

கைப்பேசி மற்றும் 300 வெள்ளி ரொக்கம் உள்ளிட்ட பொருள்கள் கொள்ளையிடப்பட்டது தொடர்பில் அந்நிய நாட்டினர் இருவரிடமிருந்து கிடைத்த புகாரின் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் சொன்னார்.

சாலாக் செலாத்தான் காவல் நிலையம் மற்றும் செராஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த போலீஸ் குழு நேற்று காலை 10.00 மணியளவில் உள்நாட்டு ஆடவர் ஒருவரை கைது செய்தது.

அந்த ஆடவர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் இரு ஆடவர்களையும் மூன்று பெண்களையும் கைது செய்து கொள்ளையின் மூலம் பெறப்பட்டவை என நம்பப்படும் பல பொருள்களை மீட்டனர் என்றார் அவர்.

எட்டு கைப்பேசிகள், இரு நீண்ட பாராங்கத்திகள், ஐந்து மடிக்கணினிகள், துப்பாக்கி போன்ற இரு ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவை அக்கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்களில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

இது தவிர, 32.4 கிராம் எடையுன்ன கஞ்சா 0.7 கிராம் எர்மின் 5 போதை மாத்திரைகளும் கைதானவர்களிடமிருந்து மீட்கப்பட்டன என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :