MEDIA STATEMENTPBT

லைசென்ஸ் இன்றி செயல்பட்ட உரத் தொழிற்சாலையை மூட உத்தரவு

ஷா ஆலம், ஜூன் 18- தஞ்சோங் காராங், பாகான் தெங்கோராக்கில் லைசென்ஸ் இன்றி செயல்பட்ட உரத் தொழிற்சாலை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டது.

இம்மாதம் 14 ஆம் தேதி போலீஸ் மற்றும் சற்றுச் சூழல் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது அத்தொழிற்சாலைக்கு குற்றப்பதிவும் வழங்கப்பட்டதாக கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் தலைவர் ரஹிலா ரஹ்மாட் கூறினார்.

கோழியின் கழிவுகளை உரமாக மாற்றும் இத்தொழிற்சாலையிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவது தொடர்பில் பொது மக்களிடமிருந்து கிடைத்த புகாரைத் தொடர்ந்து இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

முறையான அனுமதியின்றி செயல்பட்ட காரணத்திற்காக அத்தொழிற்சாலையை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டதோடு குற்றப்பதிவும் வழங்கப்பட்டது. இரு போர்க்லிப்ட் உள்பட பல்வேறு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.

விவசாய நடவடிகைகளை மேற்கொள்ளும் போர்வையில் அந்த தொழிற்சாலை கடந்த ஏழு மாதங்களாக கோழி கழிவுகளை உரமாக மாற்றும் தொழிலை மேற்கொண்டு வந்துள்ளது.

மேலும், முறையான பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தால் சுற்றுப்புறங்களில் கடுமையான துர்நாற்றப் பிரச்னையும் உண்டானது என்றார் அவர்.


Pengarang :