ECONOMYMEDIA STATEMENT

லஞ்ச வழக்கு-சிறைவாசத்தை இன்று தொடங்கி அனுபவிக்க அமைச்சரின் முன்னாள் உதவியாளருக்கு உத்தரவு

புத்ரா ஜெயா, ஜூன் 21– தமக்கெதிரான இரு லஞ்சக் குற்றச்சாட்டுகளையும்  சிறைத்தண்டனையையும் தள்ளுபடி செய்வதற்கு  அமைச்சர் ஒருவரின் முன்னாள் சிறப்பு அதிகாரி ஒருவர் மேற்கொண்ட கடைசி முயற்சி தோல்வி கண்டதைத் தொடர்ந்து அவர் இன்று தொடங்கி ஈராண்டுச் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேர்ந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி ஈப்போ நீதிமன்றம் தனக்கு விதித்த சிறைத்தண்டனைக்கு எதிராக எஸ்வாடி அப்துல் ரஹிம் (வயது 50) என்ற அந்த அந்த ஆடவர் செய்து கொண்ட மனுவை டத்தோ ஹனிப்பா ஃபரிகுல்லா தலைமையிலான மூவரடங்கிய கூட்டரசு நீதிமன்ற அமர்வு ஏகமனதாக தள்ளுபடி செய்தது.

டத்தோ வீரா அகமது நஸ்ஃபி யாசின், டத்தோ ஸ்ரீ மரியானா யாஹ்யா ஆகிய  இரு நீதிபதிகளுடன் இந்த வழக்கை செவிமடுத்த டத்தோ எஸ்வாடி மனுதாரருக்கு எதிராக செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த தண்டனையை நிலைநிறுத்திய உயர் நீதிமன்றத்தின் முடிவில் தலையிட கூட்டரசு நீதிமன்றத்திற்கு எந்த காரணமும் கிடையாது என்று தனது தீர்ப்பில் கூறினார்.

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சராக டத்தோஸ்ரீ முகமது நஸ்ரி அப்துல் அஜிஸ் பதவி வகித்த போது எஸ்வாடி அவரின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வர்த்தக வாகன லைசென்ஸ் வாரியத்திடம் அஸமாட் ஹாத்தி சென். பெர்ஹாட் நிறுவனம் விண்ணப்பம் செய்த போது அந்நிறுவனத்தின் இயக்குநராக தன் தந்தையின் பெயரை சேர்க்கச் சொல்லி எஸ்வாடி வலியுறுத்தியாக அக்குற்றச்சாட்டில் கூறப்பட்டது.

மேலும், சின் ஆ லெக் என்ற ஆடவர் வர்த்தக வாகன லைசென்ஸ் பெறுவதற்கு உதவுவதற்காக கடந்த 2003 ஜனவரி மாதம்  அவ்வாடவரிடமிருந்து 6,000 வெள்ளியை லஞ்சமாகப் பெற்றதாக அவர் மற்றொரு குற்றச்சாட்டையும் அவர் எதிர்நோக்கியிருந்தார்.


Pengarang :