ECONOMYMEDIA STATEMENT

க்ரேடல் ஃபண்ட் சி.இ.ஒ. கொலை- தீர்ப்புக்கு எதிராக அரசுத் தரப்பு மேல் முறையீடு

கோலாலம்பூர், ஜூன் 23- க்ரேடல் ஃபண்ட் நிறுவன தலைமைச் செயல்முறை அதிகாரி (சி.இ.ஒ.) நஸ்ரின் ஹசானை கொலை செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து சமிரா முஸாபர் மற்றும் இரு பதின்ம வயதினரை விடுதலை செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் மேல் முறையீடு செய்கிறது.

சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹருணை தொடர்பு கொண்ட போது இத்தகவலை அவர் உறுதிப்படுத்தினார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நாங்கள் மேல் முறையீடு செய்கிறோம் என வாட்ஸ்ஆப் புலனம் வாயிலாக பெர்மானாவுக்கு அனுப்பிய செய்தியில் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இவ்வழக்கு தொடர்பான மேல் முறையீட்டு அறிக்கை இணையம் வாயிலாக நேற்று பதிவு செய்யப்பட்டதாக துணை ப ப்ளிக் புரோசிகியூட்டர் தெங்கு இந்தான் சுராயா தெங்கு இஸ்மாயில்  தெரிவித்தார்.

இந்த வழக்கில் அடிப்படை முகாந்திரம் உள்ளதை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியதைத் தொடர்ந்து 45 வயதான நஸ்ரினை கொலை செய்த குற்றச்சாட்டிலிருந்து சமிரா (வயது 47) என்ற மாது 19 மற்றும் 16 வயதுடைய இரு பதின்ம வயதினரை விடுப்பிப்பதாக ஷா ஆலம் உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ அப்துல் கரீம் அப்துல் ரஹ்மான் கடந்த 21 ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

சமிராவும் இரு பதின்ம வயதினரும் கொலையுண்ட நபருடன் இறுதியாக காணப்பட்டனர் என்ற காரணத்திற்காக அவர்கள்தான் கொலை செய்தனர் என்ற முடிவுக்கு வர முடியாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.


Pengarang :