ANTARABANGSAECONOMYSUKANKINI

2023 சீ போட்டி- 10 தங்கப் பதக்கங்களை வெல்ல மலேசிய தடகளக் குழு இலக்கு

கோலாலம்பூர், ஜூன் 27- கம்போடியாவில்  நடைபெறவிருக்கும் 2023 சீ போட்டியில் 10 தங்கப் பதக்கங்களை வெல்ல நாட்டின் தடகளக் குழு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த பதக்க இலக்கு மிகவும் துணிச்சலாக எடுக்கப்பட்ட ஒரு முடிவு என்பதோடு இதனை ஒரு சவாலாகவும் தாங்கள் கருதுவதாக தேசிய தடகள குழுவின் பயிற்றுநர் மன்சஹார் அப்துல் ஜாலில் கூறினார்.

இந்த இலக்கு குறித்து பயிற்றுநர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளதோடு இந்த இலக்கை நனவாக்குவதற்கான முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த இலக்கு நிர்ணயம் எதிர்மறையான ஒன்று அல்ல. பயிற்றுநர்களாகிய நாங்கள் இதனை நேர்மறையாகப் பார்க்கிறோம். முறையான திட்டமிடலின் வழி கடுமையாக உழைப்பதற்கும் முன்னோக்கிச்  செல்வதற்கும் நாங்கள் தயார் நிலையில் உள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

பூர்வாங்க திட்டமிடலின்படி திடல் விளையாட்டுகளில் ஐந்து முதல் ஆறு தங்கப் பதக்கங்களையும் தடப் பிரிவு போட்டிகளில் நான்கு அல்லது ஐந்து பதக்கங்களையும் வெல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

கம்போடியாவில் நடைபெறும் சீ போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் சாத்தியம் உள்ள விளையாட்டாளர்களையும் நடப்பு சாதனைகளின் அடிப்படையில் அதிரடி படைக்கும் வாய்ப்புள்ள விளையாட்டாளர்களையும் தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்தாண்டு  மத்தியில் கம்போடியாவில் நடைபெறவிருக்கும் 2023 சீ போட்டியில் 10 தங்கப் பதக்கங்களை வெல்ல மலேசிய தடகளச் சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷஹிடான் காசிம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.


Pengarang :