ECONOMYHEALTHSUKANKINI

சிவசங்கரியின் உடல் நிலை சீராக உள்ளது- மூன்று மாதங்களில் குணமடைவார்- அமைச்சர் நம்பிக்கை

புத்ராஜெயா, ஜூன் 28- கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த  கார் விபத்தில் காயமடைந்த தேசிய மகளிர் ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரி புத்ராஜெயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சிவசங்கரியை நேற்று மருத்துவமனையில் சென்று கண்ட இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் பைசல் அசுமு, 23 வயதான அந்த  தடகள வீராங்கனையின் உடல் நிலை சீராக உள்ளதோடு அவர் விளையாட்டில் தீவிரமாக பங்கேற்பதற்கு   குறைந்தது மூன்று மாதங்கள் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடக்கவிருக்கும் 2022 பெர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கெடாவில் பிறந்தவரான அந்த தடகள வீராங்கனை பங்கேற்க முடியாது என்று அவர் கூறினார்.

சிவா (சிவசங்கரி) தற்போது சுயநினைவுடன் இருக்கிறார். நான் அவருக்கு ஊக்கமும்   ஆதரவும் தரும் வார்த்தைகளை வழங்கினேன். சிவசங்கரியும் அவரின் பெற்றோர்களும் மிகவும் திடமுடன் இருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

இந்த விபத்து பற்றி  அறிந்ததும் நான் மிகவும் கவலையடைந்தேன்.  மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களிடம் பேசியபோது, காயத்தின் தீவிரம் சற்று அதிகமாக இருந்தாலும் அதனைக் குணப்படுத்த முடியும் என்று சொன்னார்கள்.  அவர்களின் இந்த வார்த்தை மனதுக்கு நிம்மதியளிக்கிறது என்று சிவசங்கரியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை  அதிகாலை 3.45 மணியளவில் மாஜூ விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் சிவசங்கரி காயமடைந்தார்.


Pengarang :