ECONOMYPENDIDIKANSELANGOR

சிலாங்கூரில் இந்திய சமுதாயத்திற்கான ஒதுக்கீட்டை அடுத்தாண்டில் அதிகப்படுத்துவோம் – மந்திரி புசார் அறிவிப்பு

கிள்ளான், ஜூலை 4– சிலாங்கூரில் உள்ள சமய வழிபாட்டுத் தலங்கள் உட்பட இந்திய சமுதாயத்திற்கான ஒதுக்கீட்டை அடுத்தாண்டில் அதிகப் படுத்துவோம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வாக்குறுதி அளித்துள்ளார்.

ஆலயங்களுக்கு சிலாங்கூர் அரசு ஒதுக்கீடு செய்து வரும் நிதியை போன்று மற்ற மாநிலங்களும் வழிபாட்டுத் தலங்களுக்கு  நிதி  வழங்க தொடங்கி விட்டன.  இவ்விவகாரத்தில் சிலாங்கூர் முன்னோடியாக  இருப்பதற்கு, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதற்கு  இம்மாநில மக்கள்  மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றார் அவர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சிலாங்கூரில் வழிபாட்டுத் தலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் நாங்கள் முன்னோடியாக இருந்தோம்.  அதேப் போல் கல்வி மேம்பாடுகளிலும்  நமது முன்னுதாரணத்தை மற்றவர்களும் பின்பற்றினால் நாட்டுக்கும் , மக்களுக்கும்  நன்மை  என்றார்.

இருப்பினும் சமய இயக்கங்களின், அவசர உதவிகள், சமூக சேவைகளை கவனத்தில் கொண்டு, அவர்கள் பணியை மேம்படுத்த,   இன்னும்  அதிக நிதி தேவைப்படுவதை கருத்தில் கொண்டு, வரும் 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில்  இந்தியர்களுக்கான  நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும் என நான் உறுதி அளிக்கிறேன் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள வைண்டம் அக்மார் ஹோட்டலில் நடைபெற்ற இந்திய சமூக மேம்பாட்டு வடிவமைப்பு மீதான ஆய்வரங்கில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் சியு பூக், செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் இந்திய சமூகத்திற்கான மந்திரி புசாரின் சிறப்பு பிரதிநிதியுமான  டாக்டர் ஜி.குணராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டில் மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னர் சிலாங்கூரில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு ஆண்டுதோறும் 30 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டு வந்தது. ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த ஒதுக்கீடு 60 லட்சம் வெள்ளியாக உயர்த்தப்பட்டது.

இதனிடையே, சிலாங்கூர் முன்னெடுத்த பல மக்கள் நலத் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளதாக அமிருடின் சொன்னார்.

நமது செயல்முறையை பல மாநிலங்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளன. பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அத்திட்டங்கள் இன்னும் உகந்தவை அல்லது தரம் உயர்த்தப்பட வேண்டுமா என்பதை கண்டறிய அவற்றின் மீது மறு ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

எனினும், பாரிசான்  நேஷனல் அரசாங்கம் கையாண்ட வியூகத்தை நாமும் கையாள விரும்பவில்லை. ஆலய மானிய பிரச்னைக்குத் தீர்வு  காண்பது, பின்னர் ஆலய விவகாரத்தை எழுப்புவது, தேர்தல் முடிந்தவுடன் அந்த விவகாரத்தை விடுவது நமது பாணி அல்ல என்பதை சிலாங்கூர் மக்கள் அறிவர் என்றார் அவர்.

 


Pengarang :