ECONOMYMEDIA STATEMENT

பாலிங் வெள்ளம்- கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை காணவில்லை

பாலிங், ஜூலை 5- கடுமையான நீரோட்டத்தில் வீடொன்று அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் அவ்வீட்டிலிருந்த நான்கு மாத கர்ப்பிணி உள்பட மூவரை காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று  மாலை 4.00 மணியளவில் இங்குள்ள குப்பாங், கம்போங் இயோயில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் தன் மனைவி சல்மா மாட் அகிப் (வயது 53), மருமகள் நுருள் ஹனிஸ் அபு ஹசான் (வயது 23) மற்றும்  வளர்ப்பு மகனான முகமது கைருள் இக்வான் நோர் அஸ்மான் (வயது 14) ஆகியோர் காணாமல் போனதாக அப்துல் ரஹ்மான் சைட் (வயது 71) என்பவர் கூறினார்.

தங்கள் வீடு வெள்ள நீரில் அதிவேகத்தில் மூழ்கி வருவதாக தன் மருமகள் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு தம்மிடம் தெரிவித்ததாக அவர் சொன்னார்.

சம்பவம் நிகழ்ந்த போது நான் வீட்டில் இல்லை. பல்வேறு தடைகளைக் கடந்த வீடு திரும்புவதற்கு தாமதமாகி விட்டது. வீட்டிற்குச் செல்லும் பாலமும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. அங்கிருந்த எனது வீடும் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தேன் என அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

பக்கவாதம் காரணமாக தன் மனைவி படுத்த படுக்கையாக இருந்த வேளையில் தன் மருமகள் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார் என அவர் சொன்னார். வெள்ள நீர் வெகு விரைவாக உயர்ந்த காரணத்தால் அவர்களால் தங்களை காப்பாற்றிக் கொள்ள இயலாமல் போனதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :