ECONOMYMEDIA STATEMENT

கேளிக்கை மையத்தில் இரு போலீஸ் அதிகாரிகள் கைதா? காவல் துறை மறுப்பு

ஷா ஆலம், ஜூலை 7– பெட்டாலிங் ஜெயாவிலுள்ள கேளிக்கை மையம் ஒன்றில் நேற்றிரவு இருந்த இரு போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்பதோடு அவர்களிடமிருந்து பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என காவல் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

புக்கிட் அமான் உயர்நெறி மற்றும் தர நிர்ணய இணக்கத் துறையினர் (ஜிப்ஸ்) நேற்றிரவு 12.15 மணியளவில் மேற்கொண்ட சோதனையில் புக்கிட் அமான் மற்றும் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றும் ஏ.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டர் நிலையிலான இரு அதிகாரிகள் அந்த பொழுது போக்கு மையத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜுனைடி முகமது கூறினார்.

சில தரப்பினர் கூறுவது போல் அந்த அதிகாரிகள் இருவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு அவர்களிடமிருந்து எந்த ரொக்கப் பணமும் கைப்பற்றப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

எனினும், சம்பந்தப்பட்ட அவ்விரு அதிகாரிகளும் பணி நெறி தொடர்பான குற்றங்களைப் புரிந்துள்ளனரா என்பதைக் கண்டறிய இவ்விவகாரம் ஜிப்ஸ் துறையின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என அவர் கூறினார்.

விதிகளை மீறும் மற்றும் காவல் துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் விஷயத்தில் ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது என்றும் அவர் எச்சரித்தார்.


Pengarang :