ECONOMYNATIONAL

நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று வாகன எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர், ஜூலை 8– இன்று காலை 11.00 மணி நிலவரப்படி தலைநகரிலிருந்து வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குக் கரை மாநிலங்களுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. எனினும், அப்போக்குவரத்து வழக்கத்திற்கு மாறான அளவை எட்டவில்லை.

வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் ஹாஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் காரணத்தால் நெடுஞ்சாலைகளில் வாகன எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

இன்று பிற்பகல் தொடங்கி இரவு வரை நாட்டிலுள்ள நெடுஞ்சாலைகளில் வாகன எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் பேச்சாளர் கூறினார்.

வடக்கு தடத்தைப் பொறுத்த வரை 257.8வது கிலோ மீட்டர் ஏற்பட்ட விபத்து காரணமாக 3.6 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் காணப்படும் வேளையில் மற்ற இடங்களில் போக்குவரத்து சீராக உள்ளதாக அவர்  சொன்னார்.

கோம்பாக், சுங்கை பீசி மற்றும் ஜாலான் டூத்தா டோல் சாவடிகளில் வாகன எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டாலும் போக்குவரத்து சீராக இருந்தது பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது.

அந்த டோல் சாவடிகளில் ரேலா உறுப்பினர்கள் சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


Pengarang :