ECONOMYHEALTHMEDIA STATEMENT

வார இறுதியில் ஐந்து தொகுதிகளில் இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம்

ஷா ஆலம், ஜூலை 13- சிலாங்கூர் அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிலாங்கூர் சாரிங் எனப்படும் இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம் இவ்வார இறுதியில் ஐந்து தொகுதிகளில் நடைபெறவுள்ளது.

கோலக்கிள்ளான், பண்டமாரான், பத்தாங் காலி, தாமான் டெம்ப்ளர், உலு கிளாங் ஆகியவையே அந்த ஐந்து தொகுதிகளாகும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

கோலக் கிள்ளான் மற்றும் பண்டமாரான் தொகுதி நிலையிலான இலவச மருத்துவ முகாம் காம்ப்ளெக்ஸ் சுக்கான் பண்டமாரானிலும்  பத்தாங் காலி தொகுதி நிலையிலான மருத்துவ முகாம் டத்தோ அகமது ஹமிட் மண்டபத்திலும் வரும் சனிக்கிழமை நடைபெறும் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட விளக்கப்படம் ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெம்ப்ளர் தொகுதி நிலையிலான மருத்துவ முகாம்  டேவான் ஸ்ரீ சியாந்தானிலும் உலுகிளாங் தொகுதிக்கான மருத்துவ முகாம் தாமான் ஸ்ரீ கெராமாட், டேவான் எம்.பி.ஏ.ஜே.விலும் வரும் ஞாயிற்றுகிழமை  நடைபெறும்.

இந்த இலவச மருத்துவ முகாம் குறித்த மேல் விபரங்களை http://selangorsaring.selangkah.my எனும் அகப்பக்கம் வாயிலாக அல்லது 1-800-22-6600 என்ற  கட்டணமில்லா தொலைபேசி வழி பெறலாம்.

சுமார் 34 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தின் வழி 39,000 பேர் வரை பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோய்ப் பின்னணி கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், உடல் பருமனானவர்கள் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கடைபிடிக்காதவர்களை இலக்காக கொண்டு இந்த மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.


Pengarang :