ECONOMYMEDIA STATEMENTSELANGOR

பொருள் விலையேற்றத்தின் எதிரொலி- பொருளாதார ‘துன்புறுத்தல்‘ சம்பவங்கள் அதிகரிப்பு

ஷா ஆலம், ஜூலை, 13- கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கி நேற்று வரை செலாமாட் தொலைபேசி சேவையின் வழி பெறப்பட்ட 80 புகார்களில் 12 விழுக்காடு பொருளாதாரம் சம்பந்தப்பட்ட துன்புறுத்தல்கள் அல்லது புறக்கணிப்புகளை சம்பந்தப்படுத்தியிருந்தன.

அண்மைய காலமாக அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு காரணமாக இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சிலாங்கூர் மகளிர் ஆக்கத்திறன் பிரிவு (டபள்யு.பி.எஸ்.) தலைமை செயல்முறை அதிகாரி சித்தி கமாரியா அகமது சுக்பி கூறினார்.

உடல் ரீதியான துன்புறுத்தல்களை விட இத்தகைய பொருளாதார துன்புறுத்தல்கள் சம்பந்தப்பட்ட புகார்களை இப்போது அதிகம் பெற்று வருகிறோம். வாழ்க்கைச் செலவின அதிகரிப்பை சமாளிக்க முடியாமல் மனைவி மற்றும் பிள்ளைகளை கைவிட்டு கணவர்கள் தலைமறைவாகும் சம்பவங்களால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

ஜீவனாம்சம் தரப்படாமல் குடும்பங்கள் கைவிடப்படுகின்றன. இதனைத்தான் பொருளாதார ரீதியிலான துன்புறுத்தல் என்கிறோம் என்று சிலாங்கூர் கினியிடம் அவர் தெரிவித்தார்.

இந்த செலாமாட் தொலைபேசி சேவைக்கு வரும் அழைப்புகளில் பெரும்பலானாவை 44 முதல் 55 வயது வரையிலான நகர்ப்புற ஏழைப் பெண்களிடமிடமிருந்து வருவதாக அவர் சொன்னார்.

இவ்விவகாரம் உடனடியாக வட்டார மகளிர் ஆக்கத்திறனளிப்பு பிரிவு, சட்ட உறுப்பினர் மற்றும் சமூக சேவை மையங்களின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படுவதாகவும் அவர் கூறினார்.

அத்தகையோருக்கு அடிப்படை உணவுப் பொருள்கள் விரைந்து வழங்கப்படுகின்றன. தனித்து வாழும் தாயாக இருக்கும் பட்சத்தி அவர்களுக்கு கிஸ் எனப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் அன்னையர் பரிவுத் திட்டத்தின் உதவி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்றார் அவர்.


Pengarang :