ECONOMYMEDIA STATEMENT

பிறரின் வங்கிக் கணக்கை பயன்படுத்தும் இணைய மோசடிக் கும்பல்

ஷா ஆலம், ஜூலை 14- பிறரின் வங்கிக் கணக்கை பயன்படுத்தும் காரணத்தால் இணைய மோசடிக் கும்பலை அடையாளம் காண்பதில் தாங்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.

இத்தகைய மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெயரில் அல்லது தங்கள் குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் அல்லது வங்கிக் கணக்கை பயன்படுத்துவது கிடையாது என்று மாநில வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் ஏசிபி அஸ்மான் அலி தெரிவித்தார்.

மாறாக, இரவலாகப் பெறப்பட்ட பிறரின் வங்கிக் கணக்கை அவர்கள் பயன்படுத்துகின்றனர். மோசடிக் கும்பலின் தொலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு எண்களைக் கொண்டு அவர்களை போலீசார் எளிதில் பிடித்து விட முடியும் என பாதிக்கப்பட்டவர்கள் நம்புகின்றனர். உண்மை என்னவென்றால், பிறரின் பின்னால் மறைந்து கொண்டு இந்த மோசடியை நடத்துகின்றனர் என்று  அவர் சொன்னார்.

போலீசார் நடவடிக்கை எடுத்து வங்கி கணக்கின் உரிமையாளர்களை கைது செய்யும் போது அவர்கள் 300 வெள்ளி பணத்திற்காக தங்கள் வங்கிக் கணக்கை இரவலாக கொடுத்தவர்களாக இருக்கின்றனர். வங்கிக் கணக்கை இரவல் கொடுப்பவர்களில் பெரும்பாலோர் போதைப் பித்தர்களாக, வீடற்றவர்களாக அல்லது வட்டி முதலைகளிடம் கடன் வாங்கியவர்களாக உள்ளனர் என்றார் அவர்.

மீடியா சிலாங்கூர் பேஸ்புக் மற்றும் யூடியூப் வழி கடந்த செவ்வாய்க்கிழமை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட விவாத நிகழ்வில் கலந்து கொண்ட போது ஏசிபி அஸ்மான் இதனைக் கூறினார்.

ஏமாற்றப்படுவதிலிருந்து தடுப்பதற்கு அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு மறுமொழி அளிக்க வேண்டாம் என்று அவர் ஆலோசனை கூறினார்.

மேலும் தங்களின் வங்கி கணக்கு தொடர்பான முக்கிய தகவல்களை குறிப்பாக பண பரிமாற்ற உறுதி குறியீட்டு எண்களை (டி.ஏ.சி.) யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்  என்றும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :