ECONOMYMEDIA STATEMENT

தாயின் ரோலேக்ஸ் கடிகாரத்தை திருடி விற்றார்- அரசியல்வாதி மகனுக்கு 12 மாதச் சிறை

ஷா ஆலம், ஜூலை 15- திருடிய விலையுயர்ந்த கைக் கடிகாரத்தை விற்றக் குற்றத்திற்காக சபாவைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவரின் மகனுக்கு நீதிமன்றம் 12 மாதச் சிறைத் தண்டனையும் 3,000 வெள்ளி அபராதமும் விதித்தது.

டாத்து அன்வார் டாத்து அமிர்கஹார் (வயது 43) என்ற அந்த நபருக்கு கோத்தா கினபாலு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று இத்தீர்ப்பை வழங்கியது.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டதாக பெரித்தா ஹரியான பத்திரிகை கூறியது.

கடந்த மே 29ஆம் தேதி பிற்பகல் 2.30  மணியளவில் சின்சுரானிலுள்ள கடையில் தன் தாயாருக்குச் சொந்தமான ரோலெக்ஸ் வைட் ரக கைக்கடிகாரத்தை விற்றதன் மூலம் அப்பொருளை அழித்ததாக அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

தனது வீட்டின் இரும்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த கைக்கடிகாரம் காணாமல் போனதை கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதி குற்றவாளியின் தாயார் கண்டு பிடித்தார்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்  தன் மகன் அந்த கைக்கடிகாரத்தை திருடி 9,000 வெள்ளிக்கு விற்றது தெரிய வந்தது.

திருடிய பொருளை அழித்தது தொடர்பில் அந்த ஆடவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 414வது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க இச்சட்ட விதி வகை செய்கிறது.


Pengarang :