ECONOMYPENDIDIKANSELANGOR

சிலாங்கூர் பொது நூலகத்தின் புத்தக இரவல் திட்டத்தை சிங்கை அரசு பின்பற்றுகிறது

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 15- சிலாங்கூர் பொது நூலகக் கழகம் கடந்த ஈராண்டுகளாக அமல்படுத்தி வரும்  புக்ஸ்ஃபிளை2யு (Booksfly2U) எனும் திட்டத்தை சிங்கப்பூர் தேசிய நூலகம் முன்மாதிரியாகக் கொண்டுள்ளது.

புத்தக இரவல் சேவையை அந்நாட்டின் கருவள மையம் கடந்த சில மாதங்களாக இணையம் வழி மேற்கொள்வது தங்களுக்கு தெரிய வந்துள்ளதாக அக்கழகத்தின் இயக்குநர் டத்தின் படுகா மஸ்துரா முகமது கூறினார்.

முன்பு நாங்கள் இச்சேவையில் பயன்படுத்தப்படும் செயல்முறையை பகிர்ந்து கொண்டுள்ளோம். இந்த திட்டத்திற்காக புதிய செயலி எதுவும் உருவாக்கப்படவில்லை என்பதோடு நிதிச் செலவினத்தையும் ஏற்படுத்தவில்லை. மனித ஆற்றலை மட்டுமே இத்திட்டத்திற்கு பயன்படுத்தினோம் என்று அவர் சொன்னார்.

எங்களின் இத்திட்டத்தின் பால் ஈர்க்கப்பட்ட அந்நாடு தங்கள் பிரஜைகளுக்காக இச்சேவையை அமல்படுத்தியுள்ளது. சிலாங்கூரிலுள்ள கிராம நூலகங்களைப் பார்வையிடுவதற்காக அவர்கள் வரும் செப்டம்பர் மாதம் சிலாங்கூருக்கு வரவுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தின் வெள்ளி விழா நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இந்த புக்ஸ்ஃப்ளை2யூ திட்டத்தில் இவ்வாண்டு இறுதிக்குள் 8,000 பேர் வரை இணைவர் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது சுமார் 4,000 பேர் இந்த புத்தக இரவல் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு விளம்பர நடவடிக்கையை தீவிரப்படுத்தவுள்ளோம் என்றார் அவர்.


Pengarang :