ECONOMYMEDIA STATEMENT

இனி அணிகள் கிடையாது- தேர்தலை எதிர்கொள்ள ஒன்றிணைவோம்- கெஅடிலான் இளைஞர், மகளிர் பிரிவினர் சூளுரை

ஷா ஆலம், ஜூலை 16- கெஅடிலான் மகளிர் பிரிவில் இனி அணிகள் கிடையாது. வரும் 15வது பொதுத் தேர்தலை ஒன்றுபட்டு எதிர்கொள்ள அப்பிரிவு உறுதிபூண்டுள்ளது.

இங்குள்ள ஐ.சி.சி.சி. மாநாட்டு மையத்தில் கெஅடிலான் கட்சியின் மகளிர் மாநாட்டை முடித்து வைத்து உரையாற்றுகையில் அப்பிரிவின் புதிய தலைவரான செனட்டர் ஃபாட்லினா சீடேக் இவ்வாறு கூறினார்.

எங்களுக்கு பிளவுபடாத ஆதரவை வழஙகும்படி அனைத்து பேராளர்களையும் கேட்டுக் கொள்கிறேன். பவுசியா சாலே கூறியது போல் ‘‘வனித்தா பெர்லு லகி“ அல்லது “வனித்தா நாடி கெஅடிலான்‘‘ அணிகள் என்று இனி எதுவும் இல்லை.இனி நாம் “ஒரே மகளிர்“ என்று அவர் கூறியதாக சுவாரா கெஅடிலான் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அணிதான் 15வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது. ஆகவே பேராளர்கள் அனைவரும் அவர்களுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும் என ஃபாட்லினா கேட்டுக் கொண்டார்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மகளிரை சிறப்பாக வழி நடத்தப் போகும் இந்த குழுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அவர் தனது உரையில் குறிப்பட்டார்.

இதனிடையே, கெஅடிலான் இளைஞர் பிரிவு (ஏ.எம்.கே.) மாநாட்டில் உரையாற்றிய அதன் புதிய தலைவர் ஆடாம் அட்லி அப்துல் ஹலிம், வரும் 15வது பொதுத் தேர்தலில் கெஅடிலான் கட்சி சிறப்பான வெற்றியை அடைவதற்கு ஏதுவாக உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இனியும் நாம் “செஅங்காத்தான்“ அணியினரோ “ஆயோ அனாக் மூடா“ அணியினரோ அல்ல. இன்று முதல் நாம் அனைவரும் ஏ.எம்.கே.வினர். நீண்ட கால போராட்டமும் ரிபோர்மாசி இயக்கமும் நாம் அனைவரையும் உருவாக்கியுள்ளது என்று அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.


Pengarang :