ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

ஷா ஆலம் வட்டாரத்தில் வெ.2.8 கோடி வெள்ளி செலவில் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள்- கணபதிராவ் தகவல்

ஷா ஆலம், ஜூலை 18- ஷா ஆலம் வட்டாரத்தில் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில் 2 கோடியே 82 லட்சம் வெள்ளி செலவில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்படவுள்ளதாக மாநில  ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

இந்த திட்டங்களை வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை (ஜே.பி.எஸ்.) மற்றும் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் வாயிலாக மாநில அரசு மேற்கொள்ளும் என்று அவர் சொன்னார்.

இத்திட்டங்களுக்கான டெண்டர்களைக் கோரும் பணி தற்போது நடைபெற்று வருவதாகக் கூறிய அவர், இத்திட்டங்கள் யாவும் பூர்த்தியானவுடன் ஷா ஆலம் வட்டாரத்தில் குறிப்பாக தாமான் ஸ்ரீ மூடா எதிர்நோக்கும் வெள்ளப் பிரச்னைக்கு ஓரளவு தீர்வு காண முடியும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடாவில் நடைபெற்ற மலேசிய இந்தியர் குரல் (எம்.ஐ.வி.) அமைப்பின் ரோட் ஷோ எனப்படும் பிரசார பயணத் தொடர் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

இந்த வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக தாமான் ஸ்ரீ மூடாவில் உள்ள பிரச்னைக்குரிய மதகு ஒரு கோடி வெள்ளி செலவில் தரம் உயர்த்தப்படும். இப்பணியை ஜே.பி.எஸ். மூலம் மாநில அரசு மேற்கொள்ளும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

இது தவிர, மேலும் ஏழு வெள்ளத் தணிப்புத் திட்டங்கள்  மாநகரின் பகுதிகளில் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

செக்சன் 33 பகுதியில் வடிகால் முறையைத் தரம் உயர்த்துவது, செக்சன் 32, ஜாலான் சுங்கை கெலுபி மற்றும் ஜாலான் சுங்கை ரிஞ்சிங்கில் வெள்ள நீர் சேகரிப்பு குளம் அமைப்பது ஆகியவையும் அத்திட்டங்களில் அடங்கும்.

இது தவிர, ஜாலான் புக்கிட் கெமுனிங் தொடங்கி ஜாலான் கெபுன் வரையில் சாலையோரம் உள்ள கால்வாய்கள் தரம் உயர்த்தப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் சிலாங்கூர் மாநிலத்தின் பல பகுதிகள் குறிப்பாக தாமான் ஸ்ரீ மூடா கடுமையாகப் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :