ECONOMYMEDIA STATEMENT

ஜோகூர் பாலத்தில் 11 வாகனங்களை மோதிய விபத்து- லோரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு, ஜூலை 18- இம்மாத தொடக்கத்தில் ஜோகூர் பாலத்தில் வாகனத்தை கவனக்குறைவாக செலுத்தியதன் மூலம் 11 வாகனங்கள் விபத்தில் சிக்க காரணமாக இருந்ததாக டிரெய்லர் லோரி ஓட்டுநர் ஒருவர் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

எனினும், மாஜிஸ்திரேட் ஜூஹானி ஜூல்கப்ளி முன்னிலையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை 34 வயதுடைய லோரி ஓட்டுநரான அமிர் ஹசான் மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த ஜூலை 7ஆம் தேதி காலை 9.25 மணியளவில் ஜோகூர் பாலத்தில் கவனக் குறைவாக லோரியை செலுத்தியதன் மூலம் விபத்து ஏற்படக் காரணமாக இருந்ததாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டு வரையிலானச் சிறை, 5,000 முதல் 15,000 வெள்ளி வரையிலான அபராதம் மற்றும் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கும் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 42(1) பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இதனிடையே, அனுமதிக்கப்பட்டதை விட அதிக எடையை லோரியில் ஏற்றியதாக அதன் உரிமையாளரான லெவல் ஹில் ஆட்டோ பார்ட்ஸ் நிறுவனத்தின் பொறுப்பதிகாரி யாப் சீ மீன் (வயது 34) மீதும் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

அந்த லோரியில் 41,000 கிலோ எடை மட்டுமே ஏற்ற அனுமதிக்கப்பட்ட நிலையில் 91,240 கிலோ எடை அதாவது 50,240 கிலோ அதிகமாக ஏற்றப்பட்டிருந்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.


Pengarang :