ECONOMYMEDIA STATEMENT

இஸ்லாத்தை கேலி செய்த பெண் சமய இலாகாவினால் கைது- ஷரியா நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்

ஷா ஆலம், ஜூலை 19– காமெடி கிளப் ஒன்றில் இஸ்லாத்தை நிந்திக்கும் வகையில் நிகழ்ச்சியைப் படைத்த பெண்மணியை கூட்டரசு பிரதேச சமய இலாகா (ஜாவி) அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

இதே குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சித்தி நுராமிரா அப்துல்லா என்ற அந்தப் பெண்ணுக்கு ஜாமின் கிடைத்த சிறிது நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் ரமேஷ் சந்திரன் கூறினார்.

இன்று காலை 10.30 மணியளவில் கோலாலம்பூர் நீதிமன்றம் ஜாமீன் முகப்பிடத்தில் ஜாமீன் பாரத்தில் கையெழுத்திட்டப் பின்னர் அப்பெண்ணை ஜாவி அதிகாரிகள் கைது செய்ததாக அவர் சொன்னார்.

அப்பெண் 24 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டப் பின்னர் நாளை காலை 1997 ஆம் ஆண்டு (கூட்டரசு பிரதேச) ஷரியா குற்றவியல் சட்டத்தின் 7 வது பிரிவின் கீழ் அவர் ஷரியா உயர் நீதிமன்றத்தில்  குற்றஞ்சாட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்லாத்தை இழிவுபடுத்துவது அல்லது மற்றவர்கள் இஸ்லாத்தை குறைத்து மதிப்பிடும் வகையில் ஏளனப்படுத்துவது ஆகிய குற்றங்களை உள்ளடக்கிய இப்பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்கு 3,000 வெள்ளி வரை அபராதம் அல்லது கூடுதல் பட்சம் ஈராண்டுச் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள அந்த  காமெடி கிளப்பில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படும் வகையில் நிகழ்ச்சியைப் படைத்ததாக அந்த பெண்மணி மீது கடந்த 13 ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டது.


Pengarang :