ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இணைய மோசடி தொடர்பில் 89,798 புகார்கள் பதிவு- வெ.300 கோடி இழப்பு-மக்களவையில் தகவல்

ஷா ஆலம், ஜூலை 19- கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இணைய மோசடி தொடர்பில் 89,798 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இத்தகைய குற்றங்களால் ஏற்பட்ட இழப்பின் மதிப்பு 300 கோடி வெள்ளியாகும்.

இணையம் வழி பொருள்கள் வாங்குவது தொடர்பான மோசடிச் சம்பவங்களே அதிகம் பதிவு செய்யப்பட்டதாக கூறிய உள்துறை துணையமைச்சர் 1 டத்தோஸ்ரீ இஸ்மாயில் முகமது, மொத்தம் 32,791 அத்தகையப் புகார்கள் பெறப்பட்டன என்றார்.

அக்காலக் கட்டத்தில் 42,884 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் 25,891 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டதாகவும் மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் தெரிவித்தார்.

இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் சொத்துகளை முடக்கும் அதிகாரத்தை விசாரணை அதிகாரிக்கு வழங்குவதற்கு ஏதுவாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 116 பிரிவில் திருத்தம் செய்வதற்காக பேங்க் நெகாராவுடன் தாங்கள் அணுக்கமாக செயல்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

இத்தகைய மோசடி நடவடிக்கைகளுக்கு தங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த அனுமதிக்கும் நபர்களை தண்டிப்பதற்கு ஏதுவாக குற்றவியல் சட்டத்தின் 424 வது பிரிவிலும் திருத்தம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

முன்னதாக அவையில் பேசிய லெம்பா பந்தாய் உறுப்பினர் ஃபாமி பாட்சில், இத்தகைய இணைய மோசடி காரணமாக முன்னாள் அரசு பணியாளரான தனது தாயார் தாபோங் ஹாஜி கணக்கில்  வைக்கப்பட்டிருந்த 75,000 வெள்ளியை இழந்து விட்டதாக தெரிவித்தார்.


Pengarang :