ECONOMYMEDIA STATEMENT

அந்நியர்களால் நடத்தப்பட்ட மதுபான விற்பனை மையங்கள் மீது எம்.பி.கே. நடவடிக்கை

ஷா ஆலம், ஜூலை 22- கடைகளாக மாற்றப்பட்ட எட்டு வீடுகள் மீது நடவடிக்கை மேற்கொண்ட கிள்ளான் நகராண்மைக் கழக அமலாக்க அதிகாரிகள் லைசென்ஸ் இன்றி மேற்கொள்ளப்பட்ட மதுபான விற்பனையை முறியடித்தனர்.

அந்நிய நாட்டினரால் நடத்தப்பட்டதாக நம்பப்படும் இந்த கடைகளிலிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபானங்களோடு கேஸ் சிலிண்டர்கள், மேசை, நாற்காலி, மளிகைச் சாமான்கள் உள்ளிட்ட சுமார் 7,000 வெள்ளி மதிப்புள்ள பொருள்களை தாங்கள் கைப்பற்றியதாக நகராண்மைக் கழக அமலாக்க பிரிவுத் துணைத் தலைவர் ஷாருள் ஹஸ்ரி அப்துல் மஜிட் கூறினார்.

பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மேரு வட்டாரத்திலுள்ள ஜாலான் அபாடி மற்றும் ஜாலான் ஜாபரில் கடைகளாக மாற்றப்பட்ட வீடுகளில் மதுபானங்கள் விற்கப்படுவதை கண்டறிந்தோம் என்று அவர் சொன்னார்.

இவ்வாண்டில் இதே இடத்தில் மேற்கொள்ளப்பட்ட நான்காவது அதிரடிச் சோதனை நடவடிக்கை இதுவாகும் என்று பேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாதிருப்பதை உறுதி செய்ய பொது மக்கள் நகராண்மைக் கழகத்தின் கண்களாகவும் காதுகளாகவும் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :