ECONOMYMEDIA STATEMENTNATIONAL

உலக சுகாதார அவசரநிலையாக  குரங்கம்மை நோய் பிரகடனம் – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

ராய்ட்டர்ஸ், ஜூலை 24- விரைவாகப் பரவி வரும் குரங்கம்மை நோய் உலகலாவிய அளவில் சுகாதார அவசர நிலையை உருவாக்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அந்த உலக சுகாதார அமைப்பு முழு விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைமைச் செயலாளர் தெட்ரோஸ் அட்ஹனோம் கிப்ரியேசஸ் கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் அனைத்துலக அக்கறையின் பொது சுகாதார அவசர நிலை என்பது அனைத்துலக ஒருங்கிணைந்த நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு எச்சரிக்கை சமிக்ஞையாகவும் தடுப்பூசி மற்றும் சிகிச்சைக்கான வழிமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கு ஏதுவாக நிதியளிப்பு மற்றும் உலகலாவிய முயற்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாகவும் அமைகிறது.

இந்த அவசர நிலையை பிரகடனப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளைப் சமர்ப்பிப்பதற்காக கடந்த வியாழக்கிழமை கூடிய நிபுணர்கள் குழு முடிவெடுப்பதில் பிளவுபட்டிருப்பதாகவும் எனினும், இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் அந்த ஐ.நா. அமைப்பின் தலைமைச் செயலாளரிடம் உள்ளதாகவும் பெயர்க் குறிப்பிட விரும்பாத வட்டாரம் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் கூறியது.

குரங்கம்மை நோயை உலகலாவிய அவசர நிலையாக பிரகடனப்படுத்துவதற்காக  ஜெனிவாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தெட்ரோஸ், இவ்விவகாரம் தொடர்பில் முடிவெடுப்பதில் குழு உறுப்பினர்களிடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளதை ஒப்புக் கொண்டார்.

இந்நோயை உலகலாவிய அவசர நிலையாக பிரகடனப்படுத்தும் முடிவுக்கு ஆதரவாக ஆறு உறுப்பினர்களும் எதிராக ஒன்பது உறுப்பினர்களும் வாக்களித்ததாக அவர் சொன்னார்.


Pengarang :