ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தேர்தலை எதிர்கொள்ள முழு தயார் நிலையில் சிலாங்கூர் ஹராப்பான் கூட்டணி

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 24- ஐந்தாண்டு கால தவணை முடிவடைவதற்கு முன்பாகவே பொதுத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கு சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி பல்வேறு வியூகங்களை வரைந்துள்ளது.

நடப்பு அரசாங்கத்தின் ஐந்தாண்டு தவணை வரும் 2023ஆம் ஆண்டில் முடிவடைகின்ற போதிலும் நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக கெஅடிலான் கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நாம் ஏன் இந்த பயணத்தை மேற்கொள்கிறோம்? நாம் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேர்தல் நடத்த சிலாங்கூர் விரும்பவில்லை. ஆயினும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் நாடாளுன்றத் தொகுதி நிலையில் தேர்தலை நாம் எதிர்கொண்டாக வேண்டும் என அவர் சொன்னார்.

சிலாங்கூரில் 22 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. அத்தொகுதிகள் அனைத்திலும் நாம் போட்டியிட்டாக வேண்டும். நாம் முன்கூட்டியே தயாராகாவிடில் எதிரிகளின் வலையில் நாம் சிக்க நேரிடும் என்றார் அவர்.

கோத்தா டாமன்சாரா, செக்சன் 7 சமூக மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்ற சிலாங்கூர் ஹராப்பான பிரசார பயணத் தொடர் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அடுத்தாண்டு மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் சிலாங்கூர் தேர்தலை நடத்துவதற்குரிய சாத்தியம் உள்ளதையும் அமிருடின் கோடி காட்டினார்.

அடுத்தாண்டில்தான் தேர்தலை நடத்தப்போவதாக சிலாங்கூர் கூறிவிட்டது. நாடாளுன்றம் கலைக்கப்பட்டால் அதனைப் பின்பற்றி நாமும் சட்டமன்றத்தைக் கலைக்கப்போவதில்லை.  இந்த ஐந்தாண்டு தவணை முழுமையாக முடியும் வரை அதாவது அடுத்தாண்டு மூன்றாவது, நான்காவது அல்லது ஐந்தாவது மாதம் வரை ஆட்சியில் இருப்போம் என்றார் அவர்.


Pengarang :