MEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் சுகாதாரத் துறையின் சோதனையில் வெ.10,000 மதிப்புள்ள  மதுபானங்கள் பறிமுதல் 

ஷா ஆலம், ஜூலை 25– சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை கடந்த வாரம் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மாநிலம் முழுவதும் மேற்கொண்ட மதுபானங்களுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கையில் 382 போத்தல் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நடவடிக்கையின் போது 1985 ஆம் ஆண்டு உணவு விதிமுறைச் சட்டத்தின் கீழ் புரியப்பட்ட பல்வேறு குற்றங்களுக்காக 47,500 வெள்ளி மதிப்புள்ள 15 குற்றப்பதிவுகளும் வெளியிடப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷாரி ஙகாடிமான் கூறினார்.

கடையின் முன் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்காதது, மது உடல் நலத்திற்கு தீங்கானது என்ற வாசகங்கள் இல்லாதது, போத்தல்களில் மதுபான இறக்குமதியாளரின் பெயர் மற்றும் முகவரி இல்லாதது ஆகியவை  விற்பனை நிலையங்கள் புரிந்த குற்றங்களாகும் என்று அவர் தெரிவித்தார்.

இருபத்தோரு வயதுக்கும் குறைவானர்களுக்கு மதுபானம் விற்கப்படாது என்ற அறிவிப்பு கடையின் கட்டணம் செலுத்தும் முகப்பிடத்தில் வைக்கப்படாத குற்றத்திற்காகவும் சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார் அவர்.

இந்த சோதனை நடவடிக்கையில் மத்திய சுகாதாரத் துறையுடன் அனைத்து ஒன்பது மாவட்ட சுகாதார அலுவலகங்களும் ஈடுபட்டன என்ற அவர் சொன்னார்.

மதுபானங்களுடன் தொடர்பு படுத்தப்படும் மெத்தனல் விஷத் தன்மை அபாயத்தை தவிர்ப்பதற்கு ஏதுவாக மதுபானங்களை வாங்கும் போது கவனப் போக்கை கடைபிடிக்கும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :