ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

தனித்து வாழும் தாய்மார்கள் நலன் காக்கும் கிளப் அனைத்து தொகுதிகளிலும் உருவாக்கப்படும்

ஷா ஆலம், ஜூலை 26– மாநிலத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் தனித்து வாழும் தாய்மார்கள் கிளப் அமைக்கப்படவுள்ளது. அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்வது, தரவுகளைச் சேகரிப்பது மற்றும் ஒருங்கமைப்பை உருவாக்குவது ஆகிய நோக்கங்களுக்காக தொடக்க நிதியாக 1,500  வெள்ளியுடன் இந்த கிளப் தொடங்கப்படும்.

மாநிலத்தில் தனித்து வாழும் தாய்மார்கள் யாரும் விடுபடாமலிருப்பதை உறுதி செய்யும் நோக்கிலான இத்திட்டம் குறித்த அறிவிப்பு கடந்த வாரம் நடைபெற்ற ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங்  திட்டத்தின் போது வெளியிடப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சொந்தமாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய விரும்பும் தனித்து வாழும் தாய்மார்கள் சங்கங்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூறிய அவர், செப்டம்பர் முதல் தேதி தொடங்கி அக்டோபர் 30 ஆம் தேதி வரை இதற்கான விண்ணப்பத்தை அனுப்பலாம் என்றார்.

தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவுவதற்காக சிலாங்கூர் மகளிர் ஆக்கத்திறனளிப்பு அமைப்புக்கு (டபள்யு.பி.எஸ்.) 100,000 வெள்ளி கூடுதல் மானியம் வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு கடந்த வாரம் நடைபெற்ற ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வின் போது வெளியிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வாழ்க்கையையும் பொருளாதாரத்தை செம்மையாக வழிநடத்தும் வகையில் அந்த தரப்பினரின் ஆற்றலை மேம்படுத்துவதற்காக இந்த மானியம் வழங்கப்படுகிறது என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

மேம்பாட்டுத் திட்டங்கள் வாயிலாக தனித்து வாழும் தாய்மார்களின் நிலையை உயர்த்தும் மாநில அரசின் நோக்கத்திற்கேற்ப இந்த கிளப் தொடங்கப்படுவதாக சிலாங்கூர் மகளிர் ஆக்கத்திறனளிப்பு பிரிவின் தலைமை செயல்முறை அதிகாரி சித்தி கமாரியா கடந்த 24 ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :