ECONOMYSELANGOR

முதலாவது சிலாங்கூர் திட்டம் மத்திய அரசை சார்ந்திருப்பதை தவிர்க்க உதவும்

ஷா ஆலம், ஜூலை 28– சிலாங்கூர் மாநில வரலாற்றில் முதன் முறையாக தாக்கல் செய்யப்பட்ட முதலாவது சிலாங்கூர் திட்டம் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கு ஏதுவாக நீடித்த மற்றும் ஆக்ககரமான பொருளாதாரத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

மாநிலங்களுக்கான நிதியளிப்பு நியாயமானதாக இருக்க வேண்டும் என்பதால் திட்டங்களை அமல்படுத்துவதற்கு புத்ரா ஜெயாவை எந்நேரமும் சார்ந்திருக்க முடியாது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

உலகம் தற்போது எதிர்நோக்கி வரும் சுகாதார பிரச்னை, வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு, பொருள் விலையேற்றம், பருவநிலை மாற்றம், உள்ளிட்ட நெருக்கடிகள் பொருளாதாரத்திற்கும் மாநில மக்களுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.

ஆகவே, இந்த சவால்களை எதிர்கொள்வதற்கான திட்டங்களை உருவாக்குவதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் பொறுத்திருந்து பார்ப்போம் என்ற நிலைப்பாட்டை மாநில அரசு கொண்டிருக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 விழுக்காட்டு பங்களிப்பை வழங்கும் மாநிலமாக சிலாங்கூரை உருவாக்கும் நோக்கில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான மேம்பாட்டு செயல்வடிவமாக முதலாவது சிலாங்கூர் திட்டத்தை மாநில அரசு உருவாக்கியுள்ளது என்றார் அவர்.

இந்த முதலாவது சிலாங்கூர் திட்டம் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் அதேவேளையில் சமூக நலத் திட்டங்கள் வாயிலாக மக்களுக்கு ஆக்கத்திறனையும் அளிக்கிறது. அதே சமயம், நேர்மை, திறமை மற்றும் வெளிப்படைப் போக்கை அடிப்படையாக கொண்ட சேவை முறையையும் வலியுறுத்துகிறது என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :