ECONOMYSELANGOR

மாநிலத்தின் ஐந்தாண்டு கால மேம்பாட்டிற்காக வெ.21,244 கோடி மதிப்பில் முதலாவது சிலாங்கூர் திட்டம்

ஷா ஆலம், ஜூலை 28- மாநிலத்தின் அடுத்த ஐந்தாண்டு கால வளர்ச்சிக்கான செயல்வடிவமாக விளங்கும் முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் அமலாக்கம் ஒட்டுமொத்தமாக 21,244 கோடி வெள்ளியை உள்ளடக்கியுள்ளது.

மக்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டங்கள் உள்பட மாநில நிலையிலான மேம்பாட்டிற்கு 9,244 கோடி வெள்ளி ஒதுக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்நோக்கத்திற்காக மாநில அரசு 716 கோடி வெள்ளியைச் செலவிடும் வேளையில் எஞ்சிய 8,000 கோடி வெள்ளி அரசு துணை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் பங்களிப்பின் மூலம் பெறப்படும் என்று அவர் சொன்னார்.

பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள சில திட்டங்களையும் முதலாவது சிலாங்கூர் திட்டம் உள்ளடக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, 12,000 கோடி வெள்ளிக்கும் கூடுதலான மதிப்பைக் கொண்ட  இ.சி.ஆர்.எல். எனப்படும் கிழக்கு கரை நெடுஞ்சாலைத் திட்டம், எம்.ஆர்.டி. இரயில் திட்டம் ஆகியவையும் அதில் அடங்கும் என அவர் தெரிவித்தார்.

எனினும், முதலாவது சிலாங்கூர் திட்டம் 12வது மலேசியத் திட்டத்தைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது. 12வது மலேசியத் திட்டம் அடிப்படை வசதிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் வேளையில் முதலாவது சிலாங்கூர் திட்டம் மாநில அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மக்கள் நலத் திட்டங்களையும் அதில் உள்ளடக்கியுள்ளது என்றார் அவர்.

சிலாங்கூர் மாநிலத்தின் மேம்பாட்டு இலக்கை ஒருமுகப்படுத்தும் நோக்கில் முழுமையான மற்றும் விரிவான வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :