ECONOMYMEDIA STATEMENT

வீட்டை நிர்மூலமாக்கிய நிலச்சரிவு- இரு சிறார்கள் உயிரிழப்பு

கோத்தா கினபாலு, ஜூலை 28– வீட்டை நிர்மூலமாக்கிய நிலச்சரிவு சம்பவத்தில் இரு சிறார்கள் உயிரிழந்ததோடு மேலும் இருவர் காயங்களுக்குள்ளாகினர். இச்சம்பவம் இங்குள்ள தாமான் ஏலோ, ஜாலான் புக்கிட் நெனாசில் நேற்றிரவு நிகழ்ந்தது.

இச்சம்பவத்தில் மண்ணில் புதையுண்ட சிறுமியான நோராயின் ஜாஜிஸ் (வயது 11) மற்றும் இசா சப்ரி (வயது 2) ஆகிய இருவரும் குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சபா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் மிஸ்ரான் பிசாரா கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 8.26 மணியளவில் தாங்கள் தகவலைப் பெற்றதாக கூறிய அவர், சம்பவ இடத்தை அடைந்த போது ஒன்பது பேர் வசித்த வீடு நிலச் சரிவில் புதையுண்டிருப்பதைக் கண்டதாக சொன்னார்.

அவர்களில் ஐவர் உயிர்தப்பிய வேளையில் மேலும் நால்வர் மண் சரிவில் சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் இரண்டு வயது சிறுவன்  மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டான். மற்றவர்கள் தீயணைப்புத் துறையின் உதவியுடன் மீட்கப்பட்டனர் என்றார் அவர்.

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :