ECONOMYNATIONAL

இருபது லிட்டருக்கும் மேல் பெட்ரோல், டீசல் வாங்க சிறப்பு பெர்மிட் தேவை

புத்ராஜெயா, ஜூலை 28– சிறு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தங்களின் சுய தேவைக்காக 20 லிட்டருக்கும் அதிகமான பெட்ரோல் அல்லது டீசல் வாங்க விரும்பினால் 1961 ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் அதற்கான சிறப்பு பெர்மிட்டுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

அவசரத் தேவை உள்ளிட்ட இதர காரணங்களுக்காக 20 லிட்டருக்கும் குறைவாக பெட்ரோல் அல்லது டீசல் வாங்குவோருக்கு அத்தகைய பெர்மிட் தேவையில்லை என்று உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

விநியோக கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் உரிய அனுமதி பெறாமல் டிரம், தோம்பு, பிளாஸ்டிக் உள்ளிட்ட கலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளி வந்த செய்தி தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இந்த அறிக்கை வெளியிடப்படுவதாக அவர் சொன்னார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் 1961 ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் உரிய லைசென்சைப் பெற்றுள்ளதாக அலெக்சாண்டர் தெரிவித்தார்.

வாகனங்களில் உள்ள டாங்கிகள் அல்லது உரிய அங்கீகாரம் உள்ளவர்கள் தவிர்த்து வேறு எந்த விதமான கலங்களிலும் டீசல் அல்லது பெட்ரோலை விற்பதற்கு அனுமதிக்கக்கூடாது என அந்த லைசென்ஸ் நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும்  அவர் தெளிவுபடுத்தினார்.


Pengarang :